இளிச்சவாயன் ஆனா சூனா -காமெடி பாய்ஸ்5

சூனா பானா என்றால் உங்களுக்கு தெரியும். ஆனா சூனா தெரியுமா ? ஆனந்த சுந்தரம் என்ற அழகான பெயரை சுருக்கி இப்படி ஆக்கிவிட்டார்கள் என் நண்பர்கள். ஆனா சூனா பார்பதற்கு “காதல் கொண்டேன் தனுஷ்” மாதிரி இருப்பான். படிப்பிலும் அப்படியே. ஆனால் வகுப்பில் விழித்து கொண்டே தூங்குவான் என்பதால் எந்த ஆசிரியரும் டஸ்டரை கொண்டு எறிய வில்லை.

இளிச்சவாயன் என்ற பதத்துக்கு பொருத்தமாக எப்போதும் இளித்த வண்ணம் இருப்பான். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கி கொள்வதில்லை. என் கடன் இளித்து கிடப்பதே என்பது போலவே இருப்பான். ஆச்சர்யமாக பெண்களை கண்டால் கஷ்டப்பட்டு இளிக்காமல் இருப்பான். மாலை ஏழுமணி ஆகிவிட்டாலே invisible man ஆகிவிடுவான். அப்படி ஒரு கார்மேகவண்ணன். சிரித்தால் தான் இவன் இருப்பது தெரியும். எப்போதும் கொஞ்சம் போல முள் தாடி இருக்கும். சட்டைய கழட்டிவிட்டு உட்கார்ந்தால் உங்களையும் அறியாமல் ஒரு ரூபாய் போட்டுவிட்டு செல்வீர்கள். அப்படி ஒரு தெய்வீக களை.

காலேஜ் சேர்ந்த புதிதில் ஒரு நாள் அவங்க வீட்டிற்கு சென்றேன். அவனுக்கும் அவங்க வீட்டும் சம்பந்தமே இல்லை. மதுரையின் முக்கிய வீதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்திருந்தது. ஆள பார்த்து எடை போடகூடாது என்பதை மீண்டும் வலியுறித்தியது அன்றையதினம்.

படிப்பில் எல்லாத்தையும் படித்து பரிட்சையில் வாந்தி எடுக்கும் ரகமல்ல. பாடத்தை விரும்பி படித்து புரிந்துகொண்டு பரீட்சை எழுதும் ரகம். கணினி ப்ரோக்ராம்-மில் பின்னி பெடல் எடுப்பான் . எந்த கணினி மொழி என்றாலும் பிரச்சனை இல்லாமல் வேலை பார்க்கும் திறன் படைத்தவன். செஸ் இவனுக்கு பிடித்த விளையாட்டு.

சந்திரசேகரை கிண்டல் பண்ணி, சிங்கத்திடம் அடி வாங்குவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இவனுக்கும் பெயர்தான் பிரச்சனை என்றாலும் அப்துலுக்கு அடுத்து என்பதால் பெரிதாக அலட்டிகொள்ளமாட்டன். இவனுக்கு போட்டி இவன் தம்பி. எல்லாத்திலேயும் அண்ணனுக்கு மிஞ்சின தம்பியாகத்தான் இருப்பான்.

இப்போது ஆனா சூனா   பாரிசில் இருக்கிறான்.

இவன் ஒரு கலைஞன்-காமெடி பாய்ஸ்4

ரயில் நேரம் ஏதும் மாறி இருக்கிறதா ? , புதுசா ஏதும் ரயில் விடபட்டிருகிறதா ? ரயில் டிக்கெட் எளிதாக பெறவேண்டுமா? எந்த ரயில் எவ்ளோ விரைவாக வரும் போன்ற விவரங்கள் வேண்டுமென்றால் , நீங்கள் அணுக வேண்டிய நபர் சேகர் என்ற சந்திரசேகரன். இவர் ரயில்வே பணியில் உயர் அதிகாரி……….. என்று இருக்கவேண்டிய இவன் வேலை பார்ப்பது சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில். அந்த அளவுக்கு ரயில்வேயில் ஒரு ஈடுபாடு. ரயில் என் மூச்சு, ரயில் என் பேச்சு என்று வாழ்பவன்.

புனை பெயர் சிங்கம். பெயருக்கு ஏற்றார் போல யாரவது கிண்டல் பண்ணினால் ஒரே கையில் பின்னங்கழுத்தை பிடித்து இருக்குவான். நாயகன் படத்தில் வரும் கிளைமாக்ஸ் வசனம் ” நீங்க நல்லவரா, கெட்டவரா” என்று இவனை பார்த்து கேட்டால் “தெரியலேயேப்பா” என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு வில்லங்கமான ஆளு. கடவுள் பாதி , மிருகம் பாதி கலந்து செய்த கலவை. நீங்கள் கேலி, கிண்டல் பண்ணாதவரை கடவுள், கிண்டல் பண்ணிவிட்டால் மிருகம் தான். செந்தமிழ் புலவன் என்பதை நிரூபிப்பான்.

இவன் ஒரு கலைஞன். எதையும் கலை கண்ணோடுதான் பார்பான். இது அது என்று கணக்கே இல்லை. இவனை பரிசோதித்த டாக்டர் ” மூளை மட்டுமில்லாது நாடி நரம்பெல்லாம் அந்த வெறி இல்லாமல் இப்படி யோசிக்க முடியாது” என்று சொல்லிவிட்டார். அப்படி ஒரு கலைதாகம் மிக்கவன். அப்படி என்ன கலை அது என்று நான் “சொல்லி தெரிவதில்லை”. இன்னும் இதை விலாவாரியா சொல்ல ஆசைதான். பிறகு என் விலா எலும்புக்கு ஆபத்து வந்துவிடும்.

நம்புங்கள். ரெம்ப நல்லவன். நாணயமானவன். எதையும் திட்டமிட்டு செய்பவன். திட்டமிடுதல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நான் கூட இவனை பார்த்து கொஞ்சம் திருந்தி இருக்கிறேன். இவனை நம்பி ஒரு வேலையை கொடுத்தால் அது முடிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். எனக்கு சரியான நேரத்தில் நிறைய உதவிகள் செய்திருக்கிறான். கல்லூரியில் மட்டுமில்லாமல் இல்லாமல் பணியிலும் இவனுடன் இரண்டரை ஆண்டு உடன் இருந்திருக்கிறேன்.

புதுசா ஒரு அழகான பொண்ண பார்த்திட கூடாது உடனே அது என் ஆளு என்று குத்தகைக்கு எடுத்திடுவான். அந்த பொண்ணு இவனுக்கு பின்னாடி நிற்கிறவனை பார்த்து சிரிச்சிருக்கும். என்னை தான் பார்த்தாள் என்று சத்யம் பண்ணி chatல ping பண்ணுவான். கல்யாணமாகி ஒரு வருஷம் ஆனாலும் இந்த புத்தி மாறலன்னு நம்ப தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

நீயும் நானும் யார்?

என் உயிருக்கும்
மேலானவன்(ள்) நீ
என்று எத்தனை கடிதம்
எழுதினோம் – பதின்மத்து
இளமை போதை என்று
தெரியாமல்.

எத்தனை பிறவி
எடுத்தாலும் தொடரும்
நம் நட்பு  என்றா
சொன்னோம் – பருவ
மாற்றம் கூட பிறவிக்கும்
மேல் என்பதறியாது

நம் சந்திப்புகள்,
பார்வைகள் , பரிசுகள்
நட்பா, காதலா
என்று குழப்பத்தில்
கிடந்தோம் – இளமை
விபத்து மட்டுமே
என்று புரியாமல்

பிரிந்தோம்
துறந்தோம்
மறந்தோம்
தொலைந்தோம்
படிப்படியான
பரிணாம வளர்ச்சியில்
நீ யாரோ
நான் யாரோ

தேங்கி கிடந்தது
ஒரு கேள்வி மட்டும்
எது பிரித்தது
நம்மை ?

கைப்புள்ள – (காமெடி பாய்ஸ் 3)

இது ஒரு தொடர் பதிவு. ஆரம்பிக்கும் போது தொடராக ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. அங்குவை பற்றி சொல்ல போக ஒவ்வொருத்தரை பற்றியும் சுவாரஸ்யமாக சொன்னால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. முதலில் எங்கள் நட்பை பற்றி ஒரு முன்னுரை வழங்கி விடுகிறேன்.

நாங்கள் காந்திகிராமம் பல்கலைகழகத்தில்  MCA படித்த (முன்னாள்) மாணவர்கள். 2001 – 2004 Batch எங்களுடையது. மொத்தம் பத்து பேர்கள் ( அப்துல், அங்கு, ஆனந்த், பாலா, கார்த்தி, நான், ராஜ்குமார், சேகர், சுசில் மற்றும் வீரா) . இன்னொருத்தனும் இருந்தான். அவன கணக்குல சேர்கிற அளவுக்கு எங்களுடன் நெருக்கமான நட்பு வட்டத்தில் இல்லை. இந்த குறையை தீர்ப்பது போல காலேஜ்க்கு ( பல்கலைகழகம் தான். எங்கள் பேச்சு வழக்கில் காலேஜ் என்றே அழைப்போம் ) அருகில் இருந்த வகுப்பு தோழன்  மோகன்ராஜ் எங்கள் நட்பு வட்டத்தில் இணைந்தவன். இவர்கள் ஒவ்வொருத்தர் பின்னும் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. ஒவ்வொருவரும் ஒரொரு ரகம்.

இவர்களை பற்றிய இந்த தொடரில் இன்று சிக்கியவன் பாலா. பாலா ஒரு பிள்ளை பூச்சி. காலேஜ் வந்த புதிதில் திருவிழாவில் தொலைந்த குழந்தை போலவே திரிவான். அதனால் தான்  password க்கு no password என்று அடிக்க வைத்து காமெடி பண்ணினான் அப்துல்.  எதை சொன்னாலும் நம்பக்கூடிய ஆள். வகுப்புக்கு ரெண்டு மூணு பேர் இவன மாதிரி இருப்பாங்க இல்லையா. பின்னாளில் எங்க க்ரூப்பின் மகிமையில் நிறைய தெளிவாகியவன். என்ன ஓட்டுனாலும் சிரிச்சுகிட்டே ” உங்களால எவ்ளோ ஓட்ட முடியுமோ அவ்ளோ ஓட்டுங்க, இன்னும் ரெண்டே வருஷம் தான் பூமாதேவி பிளக்கபோறா.. எல்லோரும் உள்ள போகப்போறிங்க” என்று அடிக்கடி சொல்லுவான். பம்மல் திலகம் என்று பெயர் வைக்கலாம். அந்த அளவுக்கு வகுப்பு ஆசிரியர்களை கண்டால் பம்முவான்.

அவனுடன் ரெண்டரை ஆண்டு காலம் வேலையும்  பார்த்திருக்கிறேன். கடும் உழைப்பாளி, (ஏமாளி என்று கூட சொல்லலாம்). அடுத்தவர்களுக்கு assign பண்ணின வேலையை கூட நோகாமல் செய்வான். தண்ணி, தம்மு, பீடா போன்ற கெட்ட பழக்கங்கள் இவனை பார்த்து காறித்துப்பும். மற்றவர்கள் எப்பவாது New Year, Party என்று இவற்றை தொட்டாலும் இவன் தொடுவதில்லை. காதலிக்கணும்னு ரெம்ப ஆசை. ஆனால் இவன் எந்த பெண்ணையாவது பார்த்து காதலிக்கணும்னு நினைச்சாலே அந்த பொண்ணுக்கு கல்யாணம் நடந்திடும். அப்படி ஒரு தாலி வரம் கொடுக்கும் சித்தன்.

இந்த ஏக்கத்திலேயே மெய்மறந்து சாப்பிட்டு சாப்பிட்டு விஜயகாந்த் மாதிரி கழுத்துக்கும் முகத்துக்கும் வித்தியாசம் இல்லாதமாதிரி சதை வைத்து விட்டான்.( பின் குறிப்பு : காலேஜ் படிக்கும் போது குச்சியில் மாட்டின சொம்பு மாதிரி இருந்தான். )

ஆசை ஆசையாக ஒரு பல்சர் பைக் வாங்கினான். பந்தாவாக எல்லோரையும்  ஓட்டி  பார்க்க  சொன்னான். ரெண்டே வாரம் தான். பல்சரோட விழுந்து புதையல் எடுத்துவந்தான். அம்மா..அம்ம்மா.. என்று வடிவேலு பாணியில் முனங்கல் வேறு. சொல்ல மறந்துவிட்டேன். அண்ணன் வடிவேலுவின் தீவிர ரசிகன். வடிவேலாவது சினிமாவில் தான் கைப்புள்ள. இவன் நிஜ வாழ்க்கையிலேயே கைப்புள்ள தான்.

கைப்புள்ள வீட்டில் பொண்ணு பார்த்துகொண்டிருகிறார்கள், அவனுக்கல்ல அவனின் அண்ணனுக்கு.

ஊமை குசும்பு (காமெடி பாய்ஸ் – 2)

அப்துல் என்றவுடன் உங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்கள் ஞாபகம் வரலாம். எங்களுக்கு அப்துல் ஹக்கீம் தான் ஞாபகத்துக்கு வருவான். ஊமை குசும்பன் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் அவன். பார்பதற்கு தான் பரம சாது. இவனிடம் எவனாவது அப்பாவி சிக்கி விட்டால் அவன் காதில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மங்களம் பாடிவிடக்கூடிய ஆள்.

இவனுடைய பெரும் பிரச்சனை இவனுடைய பெயர் தான். எங்கள் MCA பெயர் பட்டியலில் முதல் ஆளாக வருவதால் , லேப் டெஸ்ட் , செமினார் எடுப்பது, ரெகார்ட் வைப்பது , Mock-up Interview , Project Viva என்று எல்லாத்திலும் அண்ணன் தான் முதல் ஆளாக நிற்கணும். அந்த சமயங்களில் காலேஜ்க்கு சீக்கிரமா வரணும். டென்ஷன்-இன் உச்சகட்டத்தில் இருப்பான். ” வருங்காலத்தில் எனக்கு பிறக்க போகும் பிள்ளைக்கு XXX என்று பெயர் வைத்தாலும் வைப்பேனே ஒழிய அப்துல் என்று வைக்கமாட்டேன்” – என்று நொந்து போயி சொல்லும்போது சிரிப்பு வந்தாலும் , பாவமாகவும் இருக்கும்.

திறமையானவன். கடும் உழைப்பாளி. என்ன பிரச்சனையிலும் பிறரின் உதவியை தேடாதவன். ஆனால் உலக குசும்பன்.

இவனின் ஊமை குசும்புக்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். காலேஜ்-ல சேர்ந்த புதுசு. கம்ப்யூட்டர் லேப் வகுப்புக்கு போயிருந்தோம். அவரவர் சிஸ்டத்தில் உட்கார்ந்து username and Password கொடுத்து login பண்ண வேண்டும். இவன் அருகில் உட்கார்ந்திருந்த எனது இன்னொரு நண்பன் பாலா password என்றால் என்ன கொடுக்க வேண்டும் என்று இவனிடம் கேட்டிருக்கிறான். இவனுக்கு அவன் password தெரியலேனா, எனக்கு தெரியாது. நீ  மேடம்-இடம் கேட்டுக்கோ என்று சொல்லி இருக்கலாம். no password என்று டைப் பண்ணுடா என்று சொல்ல, அந்த அப்பாவியும் ( இப்போ மாபாவி ) அப்படியே டைப் பண்ணி இருக்கு. login ஆகல என்று சொல்லவும் no என்று டைப் பண்ணி ஒரு கேப் விட்டு password என்று டைப் பண்றா என்று அப்துல் சொல்ல அந்த அப்பாவியும் அப்படியே பண்ணிருக்கு. இது தெரிஞ்சு லாபே குலுங்கி குலுங்கிசிரிச்சோம்.

இப்போ அண்ணன் போருர்ல ஒரு கம்பெனி-ல பொட்டி தட்டி கொண்டிருக்கிறார். கம்பெனி இவன ரெம்ப்ப்ப நல்லவன்னு நினைச்சு எடுத்திருக்காங்க. அங்க என்னென்ன ஊமை குசும்பு பண்ண போறன்னுதெரியல

கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம்-காமெடி பாய்ஸ்1

கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் – இந்த பாட்டை கேட்டவுடன் எனக்கும் என் நண்பர் படைக்கும் “அங்குசெல்வம்” தான் ஞாபகத்துக்கு வருவான். இந்த பாட்டுக்கும் அவனுக்கும் உள்ள சம்பந்தத்தை கடைசியில் பாப்போம். இப்போ அவனை பற்றி.

இட்லி குண்டன் என்பது அவனது செல்ல பெயர்களில் ஒன்று. இரண்டு கன்னங்களும் இரண்டு இட்லியை வாயில் ஒதுக்கி வைத்தார் போல இருக்கும். சிரித்த களையான முகம். அரும்பு மீசை. அதுக்குமேல் எவ்ளோ முயற்சி பண்ணினாலும் மீசை வளர்வதாக இல்லை. அவனின் முக பளபளப்பிற்கு என்ன கிரீம் பயன்படுத்துகிறான் என்று நண்பர்கள் கிண்டல் செய்யும் போது விழுந்து விழுந்து சிரிப்பேன். அப்படிப்பட்ட கிரீம் அது.

“ஏண்டா வீட்டில் இருந்து கிளம்பும் போதே இன்னைக்கு இவனை எப்படி ஓட்டனும்னு முடிவுபண்ணிட்டு கிளம்புவிங்களாடா ” என்பது இவனது பொன்மொழிகளில் குறிப்பிடதக்க ஒன்று. அந்த அளவிற்கு நண்பர்களின் ஓட்டை பெற்ற கவர்ச்சி கண்ணன்.

நல்லவன். கம்ப்யூட்டர் மொழிகளில் திறமையானவன். கம்ப்யூட்டர் லேப்-இல் நானெல்லாம் திக்கி திணறி கொண்டிருக்க இவன் முதல் ஆளாக Program-ஐ run பண்ணி இருப்பான். இதனாலும் , குழந்தை போன்று முகத்தை வைத்துகொள்வதாலும் இவன் மேல் மாணவிகளுக்கும் , இளம் பெண் விரிவுரையாளர்களுக்கும் மையல் உண்டு. இதை காண பொறுக்காத நண்பர் கூட்டம் தான் இவனை ” கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் , அங்கு நடுவினிலே ” என்று பாடுவதுண்டு. இவனும் ஒரு ஓட்டவாய் திலகம். எது நடந்தாலும் நண்பர்களிடம் வந்து சொல்லி விடுவான். பிறகு கேலிக்கு பஞ்சமென்ன ?

ஒரு நாள் ரயில்வே ஸ்டேஷன்-இல் காத்திருந்த போது சிம்பு ஸ்டைல்-இல் கட்டம் கட்டி தூரத்தில் வந்து கொண்டிருந்த ஒரு மாணவியை சைட் அடித்துகொண்டிருந்தான். figure இன்னும் out of focus இல் தான் இருக்கு என்று ஆரம்பித்து இன்னும் சில கமெண்ட் அடித்துகொண்டிருந்தான். அப்படியே கட்டம் கட்டிக்கொண்டு இடது புறம் திரும்பினான். பேயறைந்து போய் கையை எடுத்துவிட்டான். பின்னே இடது புறம் அந்த பெண்ணின் தங்கை close-up இல் வந்தால். அந்த பெண்கள் எங்களுடன் தினமும் ரயிலில் வருவதால் கொஞ்சம் பரிச்சயம் உண்டு வேற. அவன் அத்தோடு விட்டாலும் நண்பர்கள் விடுவதாயில்லை. அந்த மாணவிகளை பார்க்கும்போதெல்லாம் “அங்கு உன் ஆளுடா” என்று கூற ஆரம்பித்தார்கள் .

இன்று அண்ணன் அங்குசெல்வம் அமெரிக்காவில் பொட்டிதட்டி கொண்டு இருக்கிறார். அண்ணன் அங்கே போனாலும் இதே அலும்பு தான் பண்ணிகொண்டிருகிறார்.

இன்றும் நாளையும்


இன்று
காசு கொடுத்தால்
விழும்மென்றால் விழுமாம்
ஓட்டு.

நாளை
காசு கொடுத்தால்
பெய்யன பெய்யுமா
மழை ?

சொல்வதற்கு ஒன்றுமில்லை

நான் சொல்ல வேண்டியதெல்லாம்
யாரோ சொல்லிவிட்டார்கள்
திரும்ப நான் சொல்வதில்
என்ன பயன் ?
கேட்பதற்கு செவி மடுக்காத
உலகத்தில் என்றேன் நான்.

உயிர்கள் பிறப்பெடுக்கும் உலகில்
பிறப்பெடுக்காத சொற்களை
கேட்க எதற்கு செவி?
அதனால் சொல் புதிதாக.
என்றான் ஞானி.

வரும் வருடம் எப்படி இருக்கபோகிறது

காலங்கள் கடந்து போவதன் அடையாளமே புத்தாண்டு கொண்டாட்டம். பழையன கழிதலும் புதிய புகுதலும் இதன் அம்சம்.

வரும் வருடம் இப்படி இருக்கபோகிறது என்று கணித்து சொல்ல நான் ஜோதிடன் இல்லை. ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைய இருக்கிறது. ஒவ்வொருவரும் இப்படி இருக்கவேண்டும்

௧. மாதம் ஒரு மரக்கன்று நடுங்கள். வாரம் ஒன்று நட்டால் இன்னும் சிறப்பு

௨. அருகமையில் இருக்கும் இடங்களுக்கு சைக்கிளில் செல்லுங்கள். நடந்து சென்றால் உடல் ஆரோக்கியம் கூடும்.

௩. முடிந்த அளவு பிளாஸ்டிக் உபயோகத்தை குறையுங்கள். கடைகாரரிடம் இதை வலியுறித்தினால் பாராட்டத்தக்கது.

௪. அலுவலகங்களுக்கு அலுவலக பேருந்தில் செல்லுங்கள். தனித்தனி வாகனங்களை தவிருங்கள்.

௫. தமிழருடன் பேசும் போது தமிழில் பேசுங்கள் ( வேற்று மொழி நண்பர் அருகில் இல்லாதிருந்தால் )

௬. குழந்தைகளுக்கு அழகுத் தமிழில் பெயர் வையுங்கள். வடமொழியில் பெயர்வைப்பது நாகரிகம் என்று எண்ணாதிர்கள். இது மற்ற மதத்தவற்கும் பொருந்தும். முஸ்லிம்கள் உருதுவிலும், கிருஸ்தவர்கள் ஆங்கிலத்திலும் பெயர் வைப்பதைவிட உங்கள் தாய்மொழியான தமிழில் பெயர் வையுங்கள். தமிழ் பெயர்கள் இந்துக்களுக்கு தான் என்று யாரும் சொல்லவில்லை

௭. நுகர்வோராகிய உங்களுக்கு சரியான சேவையையோ , தரமில்லாத பொருளையோ , நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமான விலையிலோ கொடுத்தால் உங்களின் குறைந்த பட்ச  எதிர்ப்பையாவது காட்டுங்கள்.

௮. அரசாங்க வேலையில் இருந்தால் உங்களின் தரமான சேவையை மக்களுக்கு கொடுங்கள். உங்களின் நியாயமான சேவையில் மக்கள் மகிழ்ந்தால், உங்கள் மீது பெருமதிப்பு கொள்வார்கள். இல்லையென்றால்அவர்களின் வயித்தெரிச்சல் உங்கள் சந்ததிகளை பாதிக்கலாம்.

௯. பொது இடங்களில் புகைபிடிப்பதை  தவிர்ப்பது ஒரு நாகரிகமாக கொள்ளுங்கள்.

இன்னும் நிறைய சொல்ல வேண்டும். சுருங்க சொன்னால் தான் மதிப்பு. இல்லையென்றால் மொக்கையாகிவிடும்

பதிவுலக நண்பர்கள் , வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . இந்த வருடம் அனைத்து சந்தோசங்களையும், வெற்றியையும், நம்பிக்கையையும், புதிய சவால்களையும், அதை திறனுடன் எதிர்கொள்ளும் மனதையும் கொடுக்க என் வாழ்த்துக்கள்.

மார்கழி கோலங்கள் காணமல் போனது ஏன் ?

இந்த முறை மதுரை போயிருந்த போது, ஒரு விஷயம் எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
மார்கழி மாதம் எல்லோர் வீட்டு வாசலிலும் விதவிதமான வண்ண கோலங்கள் அழகழகாய் இருக்கும். எனது கல்லூரி நாட்களில் பேப்பர் போடும் பையனாக இருந்ததால் அதிகாலையிலேயே வீதிகளை வலம் வருவேன். தெருக்களில் இருக்கும் கோலங்களை அழிக்காமல் சைக்கிளை வளைந்து வளைந்து ஓட்டி செல்வேன். சில சமயம் இதனாலேயே பேப்பர் கட்டுகள் கீழே விழுந்துவிடும். பொறுக்கித்தனம் பண்ணாமலே பொறுக்கியாவேன். அது ஒரு அழகிய காலம்.

என்ன ஆயிற்று இந்த பெண்களுக்கு ? மார்கழி கோலங்கள் காணமல் போனது ஏன் ? இருக்கும் சில கோலங்களும் சிறுத்து விட்டது ? 20 புள்ளி 20 வரிசை என்று வீதியை அடைத்து கோலம் போட்ட பெண்கள் எங்கே போனார்கள்? என் சிறு வயதில் போட்டி போட்டுகொண்டு கோலம் போட்ட என் அம்மாவும் ஐந்து புள்ளி ஐந்து வரிசை என்று சுருக்கி விட்டார்கள் . அதே போல் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு செல்லும் பெண்களையும் காணோம்.

கோலம் போடுவது , அதிகாலையில் கோவிலுக்கு செல்வது, கோ பூஜை பண்ணுவது போன்ற அர்த்தமுள்ள கலாச்சார வழக்கங்கள் பின்னிரவு டிவி சீரியல்களில் தொலைந்து போனதோ ? இல்லை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இதை கடத்த மறந்து போனார்களா ? கல்வி போட்டியில் இளம்பெண்கள் இதை ஒதுக்கி விட்டார்களா ?

இந்த பத்தாண்டுகளிலேயே இத்தகைய மாற்றம் என்றால் அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதை எல்லாம் இழக்க போகிறோமோ ? தெரியவில்லை.