இளையராஜாவின் சிறந்த பின்னணி இசை பற்றிய முந்தைய பதிவிற்கு பின்னோட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நீங்கள் சொன்ன அனைத்து படங்களையும் சேர்த்துவிட்டேன். விடுபட்ட படங்களை தொடர்ந்து அனுப்புங்கள் . இளையராஜாவின் சிறந்த பின்னணி இசையை வெறும் பத்து எண்ணிக்கைக்குள் அடக்க நினைத்தது மாபெரும் தவறு என்று புரிந்து கொண்டேன்.
நீங்கள் சொன்ன படங்களை படிக்கும் போதே அதன் பின்னணி இசை என் காதுக்குள் ரீங்காரமிடுகிறது .
நேற்று இரவு தொலைக்காட்சிகளில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நகைச்சுவை காட்சியை பார்த்தேன். கரகாட்டகாரன் படத்தில் ராமராஜனின் கரகாட்ட கோஸ்டி காரை தள்ளி கொண்டு வரும் காட்சி அது. ஆரம்பத்திலேயே இளையராஜா அது உலக மகா காமெடி காட்சி என்பதை தன இசையால் சொல்லிவிடுவார். அந்த இசையை கேட்ட வுடனே எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். என்னுடைய சிலநண்பர்கள் இந்த இசையை தங்களின் ரிங் டோன் ஆக வைத்திருப்பார்கள் . எப்போ அழைப்பு வந்தாலும் அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்துவிடும்.
இசையால் அழுகை வரவைப்பதும், உருக வைப்பதும், துள்ளாட்டம் போட வைப்பதும் மட்டும் சிறந்த இசை அல்ல . ஒரு இசையை கேட்டவுடனே நமக்கு சிரிப்பு வர வைக்க முடியும் என்றல் ஆழ்ந்த கற்பனை வளமும், தேர்ந்த இசை ஞானமும் இருக்க வேண்டும். நானும் பல மொழி படங்களை பார்த்து இருக்கிறேன். எண்ணில் அடங்கா நகைச்சுவை படங்களை பார்த்து இருக்கிறேன். இரு விதமான பின்னணி இசைகள் தான் பெரும்பாலான படங்களில் கேட்டு இருக்கிறேன்.
ஒன்று ஸ்ப்ரிங் தாவுவது போன்ற இசை , மற்றொன்று மரக்குடுவைக்குள் கல்லை வைத்து உருட்டி விடுவது போன்ற இசை. சார்லி சாப்ளின் படங்களில் பெரும்பாலும் drums இசைதான் பின்னணி. அதன் பிறகு வந்த நகைச்சுவை படங்களில் பெரிய ரக பேண்டு ( அதை வாசிக்கும் ஆளையே மறைக்கும் அளவுக்கு இருக்குமே அதே தான் )வாத்தியங்கள் தான் இசை. அதுவும் ஒரு இசை கோர்வையில் இருக்காது. சும்மா ப்பபாம்ம் என்று தான் ஊதுவார்கள் . சமயத்தில் வயலினில் நாலு இழு இழுத்தது போல ஒரு இசை . அவ்வளவே
இதைத்தான் அனைத்து இசை அமைப்பாளர்களும் மாறி மாறி நகைச்சுவை காட்சிகளுக்கு பயன்படுத்துவார்கள். வேறு எந்த புதுமையும் இருக்காது. இதில் மாறுபட்டவர் இளையராஜா மட்டுமே. இந்த ஒரு விசயத்தில் ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ரஹ்மானும் தோல்வியே தழுவி இருக்கிறார். அவரது இசையில் வந்த எந்த படங்களின் நகைச்சுவை காட்சியும் ஞாபகம் வைத்துகொள்ளும் அளவுக்கோ அல்லது சிரிப்பை வர வழைக்கும் அளவுக்கோ பின்னணி இசை இருந்த்ததில்லை என்பதே உண்மை.
குறிப்பாக Black Humor என்று சொல்லப்படும் அடித்தட்டு மக்களின், கிராம மக்களின் துயரத்தையும் நகைச்சுவை ஆக்கும் அவர்களின் வாழ்க்கை பற்றிய முழு நீள நகைச்சுவை படத்திற்கு A.R.ரஹ்மான் ஐ இசை அமைக்க சொன்னால் அவரால் புதுமையாகவும், கேட்கும்போதே சிரிப்பு வரகூடியதாகவும் இருக்கும் பின்னணி இசையை அவரால் அமைக்க முடியுமா என்றால் சந்தேகம் தான். அவர் மட்டும் அல்ல இந்தியாவில் வேறு எந்த இசை அமைப்பாளரை எடுத்துகொண்டாலும் இதே கதை தான். இங்கே தான் இளையராஜா ஒரு முழுமையான இசை அமைப்பாளர் என்பதை உறுதி செய்கிறார்.

உடனே A.R.ரஹ்மான் இசை என்றால் எனக்கு ஆகாது எனவும், இளையராஜாவுக்கும் மட்டுமே ரசிகன் எனவும் என்னை நினைக்க வேண்டாம். நான் இசைக்கு தான் ரசிகன். கலைஞனை வெறித்தனமாக ரசிக்க ஆரம்பித்தால் கலையை ரசிக்க முடியாது. A.R.ரஹ்மானும் ஒரு முழுமையான இசை அமைப்பாளராக மாற வேண்டும் என்பதே என் ஆசையும். அதற்கு இயக்குனர்கள் தான் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை | குறிச்சொற்கள்: A.R.ரஹ்மான், நகைச்சுவை
