என் மகளும் தமிழும்

தமிழின் தொன்மையும், ஆழமும் பாட புத்தகங்களில் , வரலாற்று கதைகளில் , அறிஞர்களின் பேச்சினில் நிறைய படித்திருக்கிறேன். விக்கிபீடியா சொல்லும் கணக்குப்படி 2500 வருடங்களுக்கும் மேலான பழமையான மொழி என்கிறது. 4000 வருடங்கள் பழமையான மொழி என்று தமிழ் தாத்தா  உ. வே.சாமிநாத ஐயர் சொல்லியிருக்கிறார். சில வரலாற்று நூல்கள் சொல்லும் கணக்கை பார்த்தால் 6000 வருடத்தை தொடும் என்று தோன்றுகிறது.

tamil

ஆனால் நான் சொல்லும் கணக்கு கொஞ்சம் விசித்திரமானது. என் கணக்குப்படி தமிழ் 10,000 வருடங்களுக்கு மேலான  பழமையான ஆதி மொழி. உலக மொழிக்கெல்லாம் மூத்த மொழி என்றே சொல்வேன். மனிதன் பேச ஆரம்பித்த காலம் தொட்டு பிறந்து வளர்ந்த மொழி என்று சொல்வேன். என்ன ஆதாரம் ? நாம் தான் ஆதாரம் . நம் குழந்தை தான் ஆதாரம்.

என் மகள் மீனாட்சி இப்போது பேச முயற்சிக்கிறாள். அவள் பேசிய முதல் சொல் ம்ம்மா . பின்பு சிறிது நாள் கழித்து அம்மா.. என்று அழகாக சொல்ல ஆரம்பித்தாள். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா.. என் மனைவி தன்னை மம்மி என்று தான் அழைக்க சொல்வேன் என்று  என் குழந்தையை பார்த்து மம்மி.., மம்மி சொல்லு என்பாள். என் மகளோ அம்ம்மா என்று அழுத்தி உச்சரிப்பாள். எனக்கு இது வேடிக்கையாக இருக்கும்.

பிறகு சிறிது நாள் கழித்து அப்பா என்றும் அழைக்க ஆரம்பித்தாள். ஒரு அப்பன் தன் குழந்தை தன்னை அப்பா என்றழைக்கும் முதல்  தருணத்தில் அடையும் சந்தோசத்திற்கு ஈடு இணையாக எதையும் சொல்ல முடியாது. அந்த தருணமும் வந்தது. மீண்டும் அவளுக்கும் அவள் அம்மாவுக்கும் ஊடல் ஆரம்பித்தது. என் மனைவி டாடி சொல்லு என்பாள். என் மகளோ அபா என்றோ அப்பா என்றோ தான் சொல்வாள். நான் இங்கிட்டு வேலை பார்த்துகொண்டிருக்கும் போது, நீ அங்கிட்டு அப்பா சொல்லுன்னு குழந்தைகிட்ட சொல்லிகொடுத்திருக்க ? என்று என்னிடம் சண்டை பிடிப்பாள். நான் சிரித்து கொண்டே அவள் என் பிள்ளை என்பேன்.

பிறகு அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் உறவுகளை குறிப்பதாக தான் இருந்தது, தாத்தா, மாமா , அத்தை , பாப்பா என்று . இத்தனைக்கும் எங்கள் உறவுகள் இருப்பதோ மதுரையிலும் ராமநாதபுரத்திலும், நாங்கள் இருப்பதோ கர்நாடகத்தில்.

இப்போது புதிதாக இரண்டு வார்த்தைகள் சொல்கிறாள். அந்தா.. , இந்தா – என்பன அவை. வெளியே போகவேண்டும் என்றாலோ , எதையாவது எடுக்க வேண்டும் என்றாலோ அந்தா.. என்று சொல்வாள். எங்களுக்கு எதைவது கொடுக்கும் போதோ , ஊட்டிவிடும் போதோ இந்தா இந்தா என்பாள்.

மற்ற மொழிகளுக்கும், தமிழுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். மற்ற மொழிகள் , பிற மொழிகளில் இருந்து சொற்களை பெறும்போது தமிழ் மட்டும் மனித வாழ்கையில் இருந்து இயல்பான ஒலியில் தருவித்து கொண்டது.

 

இன்னும் வளரும்..

5 பதில்கள்

  1. நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும் போது ஒரு க்யூட்டான குழந்தை உட்கார்ந்து கையை நீட்டி ‘ந்தா’ என்று சொல்வது போல உணர்கிறேன். குழந்தை ‘ம்ம்மா’ சொல்லும்போது வெற்றியில் களித்திருப்பீர்களே, என்னாலதான் எதிர்க்க முடியலை, நீயாவது உங்கம்மாவை எதிர்க்கறியே என்று அவ கைக்கு தங்கக் காப்பு பண்ணி போட்டிருப்பீர்களே?

    http://kgjawarlal.wordpress.com

    • தங்க காப்பு இல்ல, வைர காப்பே வாங்கி போடணும். மீனு குட்டிக்கு கோபம் வந்தால் “ஆத்தா , ஆத்தா” என்று அழைப்பாள். இவள் என்று வளர்வாள், என்று இவளை வைத்து என்னவளை எதிர்கொள்வது என்றுகாத்துகொண்டிருகிறேன்.

  2. சங்கத் தமிழ் வளர்த்த ஊரான மதுரை. மீனாட்சியின் பெயர் குழந்தைக்கல்லவா.
    10.000 வருஷம் முந்தைய மொழி நான என்று
    உங்களுக்குத் ,தமிழ் தோனறுகிறதல்லவா. மழலையிலும் தமிழ்ப் பற்று காண்கிறீர்கள். அவள் தமிழமுதாக இருக்கலாம்.
    புதையலாகவும் தோன்றும். சுட்டி குட்டிக்குப் பாராட்டும், அன்பும்.

  3. அதுதானே எப்படி புலிக்கு பிறந்தது பூனையாக மாறும்
    உங்களின் வலைபதிவு நன்றாக இருக்கிறது ,அதுவும்
    உங்களின் தமிழ் உணர்வு ,மிகவும் பெருமையாக உளது அய்யா
    வாழ்த்துக்கள் .

மறுமொழி இடுக